அமைதியான முறையில் நடந்து முடிந்த மேற்குவங்க தேர்தல் - முழுவிபரம்!
By : Shiva
மேற்கு வங்கத்தில் இன்று இறுதிகட்ட தேர்தல் 35 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 11,860 வாக்குசாவடிகளில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இன்று நடைபெற்ற இறுதிக் கட்ட தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்ததை காண முடிந்தது. இதன் காரணமாக மேற்கு வங்கத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 76.07 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
தேர்தல் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது. மத்திய ஆயுத படையினர் உள்ளூர் காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தல் நியாயமான முறையில் நடப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த தேர்தல் ஆணையம் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹ 339.45 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தது.
கடைசிக் கட்ட தேர்தலில் மொத்தம் உள்ள 11,860 வாக்குச்சாவடிகளில் பெரும்பான்மையானவை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. இந்த தேர்தலில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் ஆயுதங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தது.
கொரோனா நோய்தொற்று நெறிமுறைகளை கடைப்பிடித்து வாக்கு எண்ணும் பணிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா,புதுச்சேரி,மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ஆம் தேதி எனப்படுகிறது.