Kathir News
Begin typing your search above and press return to search.

கோவைக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை - முதல்வருக்கு வானதி சீனிவாசன் கடிதம்!

கோவைக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை - முதல்வருக்கு வானதி சீனிவாசன் கடிதம்!
X

ShivaBy : Shiva

  |  10 May 2021 4:12 PM IST

கோவையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்காக உடனடியாக ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும் கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவையிலும் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் போதிய அளவில் இல்லை என்று அகில இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை தலைவர் டாக்டர் ராஜேஷ் பாபு கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அவர் தனது கடிதத்தில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 300க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளது.இந்த மருத்துவமனைகளில் தற்போது 51 தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. இங்கு 4 அரசு மருத்துவமனை மற்றும் ஐந்து தற்காலிக கொரோனா மருத்துவமனைகளில் மொத்தம் 1156 கொரோனா படுக்கைகள் உள்ளன.

ஆனால் தினமும் கோவை மாவட்டத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருவதால் அவர்களில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் தேவைப்படுகின்றது. இதனால் அனைத்து நோயாளிகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களின் உதவியை நாடுவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் "தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி ஸ்டெர்லைட் ஆலை மூலமாக கிடைப்பதற்கு காலதாமதம் ஆகிறது என்பதை அறிந்தேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு என்ன உதவிகள் வேண்டுமோ அதனை உடனடியாக தமிழக அரசு செய்ய வேண்டும். மத்திய அரசின் தொகுப்பில் இருந்து இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் ஆக்சிஜன் அளவை இன்னும் பத்து நாட்களுக்கு தொடர வேண்டும் என மத்திய அரசாங்கத்திற்கு தாங்கள் உடனடியாக தமிழக அரசின் சார்பில் வலியுறுத்த வேண்டும்."

"கோவை பகுதியில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் சப்ளை தேவைப்படுவதால் தமிழக அரசு கோவை மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தமிழக அரசு

ஆக்ஸிஜன் வினியோகத்தை அதிகரிக்க வேண்டுமென்று கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பம்பரமாக சுழன்று வேலை செய்துவரும் வானதி சீனிவாசனின் செயலை கண்டு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே ஆச்சரியம் அடைகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News