ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கவேண்டிய டோக்கனை தி.மு.க. வினர் வழங்கியதால் பரபரப்பு!
By : Shiva
கரூரில் கொரோனா நிவாரணமாக 2000 ரூபாய் கொடுப்பதற்கான டோக்கனை தி.மு.க.வினர் விநியோகம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று 2000 ரூபாய் கொடுப்பதற்கான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்றுமுதல் கொரோனா நிவாரணம் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கரூரில் தி.மு.க.வினர் ரேஷன் கடை ஊழியர்களுடன் சென்று டோக்கன் வினியோகம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. முன்னதாக அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்பட்டபோது அ.தி.மு.க.வினர் டோக்கன் விநியோகம் செய்வதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்து இருந்தார். பொங்கல் பரிசாக 2500 ரூபாய் அரசு கஜானாவில் இருந்து எடுத்து தர படுவதாகவும் அதனை அ.தி.மு.க.வினர் எப்படி வழங்கலாம் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் தற்போது தமிழக அரசு சார்பாக கொடுக்கப்படும் டோக்கனை தி.மு.க.வினர் வழங்கிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின் போது இதனை பெரிது படுத்தி பேசிய ஊடகங்கள் யாவும் தற்போது வாய்மூடி அமைதி காப்பது எதற்காக என்று தெரியவில்லை என்று சமூக வலைதளங்களில் விஷயங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அரசு கொடுக்கும் நிவாரண பொருட்களை அரசு அதிகாரிகள் மூலமாகவே கொடுக்க வேண்டும் என்றும் கட்சி சார்ந்த நபர்கள் யாரும் வழங்கக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.