பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும்- தமிழக முதல்வருக்கு கமலஹாசன் கோரிக்கை!
By : Shiva
கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் சுமையை குறைக்கும் விதமாக தேர்தல் அறிக்கையில் தி.மு.க.வால் அறிவிக்கப்பட்டிருந்ததை போல் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை தற்போது நிறைவேற்றினால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா முதல் அலையில் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து மீள முடியாமல் மக்கள் துன்பம் அடைந்து வருகின்றனர்.
இதனால் வேலை இழப்பு, வருவாய் இழப்பு மற்றும் மருத்துவ செலவினங்கள் என மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா தமிழக மக்களை சுனாமி போல் தாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. ஆனால் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல பெட்ரோல், டீசல் விலை பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது போல் பெட்ரோலுக்கு ரூபாய் ஐந்து ரூபாயும், டீசலுக்கு நான்கு ரூபாயும் குறித்து உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக ஸ்டாலின் முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரது வீட்டிற்கு நேரில் சென்று தனது வாழ்த்தை முதலமைச்சருக்கு கமலஹாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.