"ஸ்ரீரங்கம் ஜீயரைத் தேர்ந்தெடுப்பதில் அரசு தலையிடக் கூடாது"- வைணவர்கள் கண்டனம்!
By : Yendhizhai Krishnan
சில நாட்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் தலைமைக் குருவான ஜீயர் சுவாமிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு '51வது ஜீயர் பதவிக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்' என்று இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்து மக்கள் பலரும் அறநிலையத் துறையின் இந்த ஆணவம் போக்கைக் கண்டித்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள தீர்த்தகாரர்கள், ஸ்தலதாரர்கள் இணைந்து அறநிலையத் துறையைக் கண்டித்து தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
வைணவத்தில் ஜீயர் என்பவர் முழுமையான சன்னியாசம் அடைந்து தீக்ஷை பெற்று தனது சிஷ்யர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய ஒருவர். இத்தகைய மிக உன்னதமான பதவியை, ஏதோ அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய டைப்பிஸ்ட், பியூனைத் தேர்ந்தெடுப்பது போல ஜீயரைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 26இன் படி, அரசு எந்த சமய உள்ளீடுகளிலும் தலையிடக் கூடாது என்ற விதி இருக்கும் நிலையில், ராமானுஜருக்கு பிறகு இதுவரை சுமார் 50 ஜீயர்களையும் ஸ்தலதாரர்கள் தீர்த்தகாரர்கள் இணைந்து தேர்ந்தெடுத்து வரும் போது 51வது ஜீயரை மட்டும் அரசு தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அறநிலையத் துறையின் பணி கோவில் சொத்துக்களை நிர்வகிப்பது, பராமரிப்பது என்பதோடு மட்டுமே. இதை நன்றாக அறிந்திருந்தும், சமய நம்பிக்கைக்குள் நுழைவது அறநிலையத் துறையும் அரசும் நுழைவது அத்துமீறல் என்றும், இது வைணவர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்பதை இந்த அரசு உணர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
"அரசால் நியமிக்கப்படும் தேவஸ்தான அறங்காவலர்கள் குழு தேர்ந்தெடுக்கும் அளவிற்கு ஜீயர் சாதாரணமானவர் அல்ல. அவர்தான் ஸ்ரீரங்கம் கோவிலின் தலைமை குரு. பல பூஜை புனஸ்காரங்களையும் பல்வேறு சடங்குகளையும் நடத்துவதற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. எனவே எங்களுடைய நம்பிக்கைகளில் அரசு ஒரு போதும் தலையிடக் கூடாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் ஊரடங்கு சமயத்தில் வழக்கமாக நடைபெறும் சடங்குகள், உற்சவங்களை அறநிலையத் துறை நடத்தாததால் கோவில் பாதுகாப்பு சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் இது குறித்து நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் வழிபாட்டு முறைகளை அறநிலையத் துறை மீறியதைக் கண்டித்த நீதிமன்றம் அவற்றை வழக்கம் போல் பின்பற்ற உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பிரதாயங்களை மீறி வைணவர்களின் நம்பிக்கையில் கை வைக்கும் செயலில் அறநிலையத் துறை மீண்டும் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.