கொரோனா நோயால் குணமடைந்தவர்களுக்கு கருப்பு புஞ்சை - ஒருவர் பலி!
By : Shiva
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு உத்தரகாண்டில் ஒருவர் பலியாகி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இந்த நோய் தொற்றிலிருந்து குணமாவோர்க்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தியில் 'மியூகோமைகோசிஸ்' என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அரிய வகை மற்றும் அபாயகரமான பூஞ்சை ஆகும்.
இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி,காய்ச்சல், கண் வலி, மூக்கடைப்பு, பார்வை குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகின்றது. இந்த கருப்பு பூஞ்சை கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களையே தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.உத்தரகாண்டில் இதுவரை 15 பேர் இந்த அரியவகை கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உத்தர்காண்டில் உள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் என்றும் சிகிச்சையில் குணமாகிய அவருக்கு கருப்பு பூஞ்சை தாக்கியதால் உயிரிழந்துள்ளனர் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மீண்டும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் கொரோனா நோயில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.