அரசு நிகழ்ச்சிகளை அரசியல் மேடையாக்கலாமா? தமிழக அரசுக்கு நீதிபதிகள் காட்டம்!
By : Shiva
அரசு நிகழ்ச்சிகளை அரசியல் மேடையாக மாற்றலாமா என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசு சார்பாக கொரோனா நிவாரண நிதியாக ₹ 2000 ரூபாய் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடந்த 15ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பாக வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதியை ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் நிர்வாகிகளை அழைத்து கொண்டு நியாயவிலை கடைக்குச் சென்று அங்கு பொதுமக்களுக்கு 2000 ரூபாயை விநியோகித்து வருகின்றனர்.
மேலும் பல இடங்களில் நியாய விலை கடை முன்பு பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனர்களில் அந்த தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படம் இடம் பெற்றுள்ளது. இன்னும் சில இடங்களில் நியாய விலை கடை முழுவதும் திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சிக்கொடி கடை முழுவதும் கட்டப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை கடைபிடிக்காமல் ஆளும் கட்சியினர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி, செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அரசு நிகழ்ச்சிகளை அரசியல் மேடையாக மாற்றலாமா என்று அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை திங்கட்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.