மதுரை காப்பகத்தில் கொடூரம் - பெற்றோரிடம் அனுப்பட்ட குழந்தைகள்!
By : Yendhizhai Krishnan
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் 11 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணி புரியும் 3 பெண்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் கொரோனா சேவை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த குழந்தைகள் காப்பகத்தில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு பணியாளருக்கும் சில நாட்களுக்கு முன்பிருந்தே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட அறிகுறிகள் தென்பட்டதாகவும் இதையடுத்து அவர்களுக்கு சோதனை செய்த போது கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் காப்பகத்தில் உள்ள பிற குழந்தைகளுக்கும் பணியாளர்களுக்கும் சோதனை செய்யப்பட்ட போது அவர்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து காப்பகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்த குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் அனுப்பி வைக்கும் பணியில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
14 குழந்தைகள் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டு பெற்றோர் இல்லாத 2 நிராதரவான குழந்தைகள் மட்டும் தொடர்ந்து காப்பகத்தில் தங்க வைக்கப்படுவர் என்றும் அவர்களை காப்பக பணியாளர்களே கவனித்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்று பல காப்பகங்கள் செயல்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான குழந்தைகளுக்கு பெற்றோர் இருக்கின்றனர்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, உணவு, உடை, கல்வி தருகிறோம் என்று ஆசை காட்டி காப்பகங்களில் தங்க வைத்து அவர்களை அனாதைகள் என்று இணையதளங்களில் விளம்பரப்படுத்தி வெளிநாடுகளில் இருந்து அளவுக்கு அதிகமாக நிதி பெறுவதை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து பெற்றோர் உள்ள குழந்தைகளை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Source: Times Of India