ஊரடங்கை பயன்படுத்தி சுவாமி சிலைகளை விற்க முயற்சி - அலர்ட்டான காவல் துறையால் மீட்பு.!
By : Yendhizhai Krishnan
சுவாமி சிலைகளை விற்க முயன்ற கும்பலை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் சிலைகள் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ஊரடங்கு கட்டுப்பாடுகளை செயல்படுத்த கண்காணிப்பு பணி மற்றும் வாகன சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
திருச்சுழி கமுதி சாலையில் அபிராமம் சந்திப்பு அருகே வீரசோழன் காவல் நிலைய துணை ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில் காவலர்கள் அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கோவில் காவல்துறையினரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்று உள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவர்களை மடக்கி பிடித்து சோதனையிட்டுள்ளனர். சோதனையில் அவர்களிடம் உலோகத்தினாலான அம்மன் சிலை ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இருவரையும் சிலையோடு நரிக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் சோதனையில் கிடைத்ததை போல மேலும் மூன்று சிலைகளை கூட்டணியுடன் சேர்ந்து பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கூட்டணி சின்னையாவின் வீட்டில் சென்று சோதனை செய்தபோது அங்கு விநாயகர் சிலை புத்தர் சிலை மற்றும் மற்றொரு அம்மன் சிலை உள்ளிட்ட பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று சிலைகளைக் கைப்பற்றினர்.
இதில் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்து விசாரித்ததில் ஊரடங்கை பயன்படுத்தி திருச்சுழிக்கு எடுத்துச் சென்று சிலையை விற்க முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களுக்கு சிலைகள் எங்கிருந்து கிடைத்தன, எங்கிருந்தாவது திருடினார்கள் அல்லது வேறு எவரிடம் இருந்தாலும் அது விற்பதற்காக வாங்கினார்களா என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Source: The Hindu