கோவில் தொடர்பான கோரிக்கைகளை பதிவிட அறநிலையத் துறை இணையதளத்தில் புதிய வசதி.!
By : Yendhizhai Krishnan
கோவில் தொடர்பான புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக இந்து அறநிலையத் துறை சார்பாக 'கோரிக்கைகளை பதிவிடுக' என்ற புதிய இணையவழி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இங்கு பெறப்படும் கோரிக்கைகள் மீது 60 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவில் தொடர்பான புகார்களை அளிப்பதற்காக இந்து அறநிலையத்துறை சார்பாக 'கோரிக்கைகளை பதிவிடுக' என்ற புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கையில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடன் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், மனைகள், கட்டடங்கள் போன்றவற்றின் குத்தகை, வாடகைத் தொகை உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வருவதாகவும் அவற்றை ஆன்லைன் வாயிலாக தீர்த்து வைப்பதற்காக இந்த இணையதள சேவை hrce.tn.gov.inல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி புகார் அளிக்கலாம் என்றும் புகார் மனுக்களுடன் தொலைபேசி எண் சேர்த்து புகார் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். பக்தர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது 60 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தற்போது கோவில் சொத்துக்களுக்கான வாடகை/ குத்தகை, ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்து தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலையில் கோவில் பாதுகாப்பு சமூக ஆர்வலர்களுக்கு இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Source: Dinamalar