"புதுச்சேரியில் பாஜகவிற்கு சட்டப்பேரவை தலைவர் பதவி" - அமைச்சரவை விரைவில் பதவி ஏற்கும் என தகவல்!
By : Shiva
புதுச்சேரியில் சட்டப்பேரவை தலைவர் பதவி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் உள்ள 33 தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் அமைச்சரவை அமைக்கப்படாமல் தொடர்ந்து இழுபறி இருந்து வந்தது. சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு மற்றும் நியமன எம்எல்ஏக்கள் என புதுச்சேரி சட்டசபையில் பாஜகவின் பலம் 12 ஆக இருந்து வருகிறது.
அமைச்சரவை அமைப்பதில் சிக்கல் இருந்து வருவதால் அம்மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் சட்டசபை உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் பதவி பாஜகாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அமைச்சரவை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் இரு தினங்களில் அமைச்சரவை பதவி ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பாஜகவிற்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் அக்கட்சிக்கு சட்டப்பேரவை தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதுச்சேரியில் பாஜகவிற்கு சட்டப்பேரவை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி பாஜகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.