"மேகி நூடுல்ஸ் மோசம்" - தயாரிக்கும் நிறுவனமே ஒப்புதல்! கொதிக்கும் மக்கள்!
By : Parthasarathy
சிறியவர் முதல் பெரியவர் வரை பலர் ரசித்து உண்ணும் உணவு பொருள் என்றால் அது இரண்டு நிமிடத்தில் தயாராகும், 'மேகி நுாடுல்ஸ்' தான். ஆனால் இந்த மேகி நூடுல்ஸ் உடலுக்கு ஆரோக்கியமானவை அல்ல என்று இதை தயாரிக்கும் "நெஸ்லே" நிறுவனம் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும், தன் உற்பத்தி மையங்களை அமைத்துள்ள 'நெஸ்லே' நிறுவனம், அதன் உணவு பொருட்களின் தரம் தொடர்பான சர்ச்சையில், அடிக்கடி சிக்கி வருகிறது. இந்தியாவிலும் இந்த மேகி நூடுல்ஸ் சிறிது காலத்திற்கு தடை செய்யப்பட்டு, அதன் பின் அந்த தடை நீக்கப்பட்டது. அந்த சமயம் முதலே மேகி நூடுல்ஸ் மீது மக்களிடையே பெரும் சந்தேகம் எழுந்தது. இருப்பினும் அதை மக்கள் இன்றும் விரும்பி உண்கின்றனர்.
இதற்கிடையே, அந்த நிறுவனம் தயாரிக்கும் உணவு பொருட்களின் தரம் குறித்த ஆய்வறிக்கையை, அதன் அதிகாரிகள் சமீபத்தில் சமர்ப்பித்தனர். அதில், அந்நிறுவனம் தயாரிக்கும் மேகி நுாடுல்ஸ், ஐஸ்கிரீம் உட்பட, 60 சதவீத உணவு பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்த தகவல் வெளியாகி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி தன் தயாரிப்புகளில், ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும், உடல்நிலை தொடர்பான விஷயம் என்பதால், அவற்றை ஆரோக்கியம் மற்றும் சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், நெஸ்லே நிறுவனம் கூறியுள்ளது.