மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி - குஜராத் கெவாடியாவில் அதிரடி!
By : Shiva
நாட்டிலேயே முதல்முறையாக மின்சார வாகனங்களை மட்டுமே அனுமதிக்கும் பகுதி என்று குஜராத்தில் கெவாடியா பகுதியை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க முடியும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு, பெட்ரோல்,டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதற்கு மத்திய மாநில, அரசுகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக குஜராத்தில் உள்ள கெவாடியா பகுதியில் அமைந்துள்ள 182 மீட்டர் உயரமுள்ள வல்லபாய் பட்டேலின் ஒற்றுமைக்க சிலையை சுற்றி உள்ள பகுதி முழுவதிலும் மின்சார வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
மேலும் அந்த பகுதியில் மின்சாரம் வாகனங்கள் மட்டுமே இயக்கும் வகையில் படிப்படியாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் முதல் மின்சார வாகனங்கள் நகரமாக கெவாடியா மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மின்சார பேருந்துகள், மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு கடனுதவி வழங்கப்பட உள்ளதாக ஒற்றுமைக்கான வளர்ச்சி-சுற்றுலா நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் அரசு அதிகாரிகளுக்கும் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும் என்றும் மீத தொகையை அவர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கெவாடியா பகுதியில் பெண்களால் இயக்கப்படும் வாடகை ஆட்டோக்கள் போன்றவை மின்சார வாகனங்களாக மாற்றப்படும் என்றும் மின்சார வாகனங்கள் பழுது பார்ப்பதற்கான கடைகளும் அப்பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜூன் 5ஆம் தேதி சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கேவாடியா பகுதியானது முற்றிலும் மின்சார பேருந்துகள், மின்சார இருசக்கர வாகனங்கள் ஆகியவை மட்டுமே பயன்படுத்தும் பகுதியாக விரைவில் மாற்றப்படும் என்று தெரிவித்திருந்தார்.
Source : Dinamani