கோரிக்கை விடுத்த புதுச்சேரி மாணவர் - உடனடி நடவடிக்கை எடுத்த ஆளுநர் தமிழிசை!
By : Shiva
பொது மக்களின் கோரிக்கையை ட்விட்டர் மூலம் ஏற்று அதனை உடனடியாக செயல்படுத்த ஆணை பிறப்பித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன.
தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழிசை சௌந்தர்ராஜன் கூடுதலாக புதுச்சேரி மாநிலத்திற்கும் துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார். புதுச்சேரியில் மருத்துவமனைகளை ஆய்வு செய்வது போன்ற கொரோனா தடுப்பு பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அவருக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை ஒன்று வந்தது.
அதில் மாணவர் ஒருவர் ஜூன் 30-ஆம் தேதி கனடாவிற்கு தனது படிப்பு சம்பந்தமாக செல்ல இருப்பதால் அவருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் கட்டாயம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இருக்கும் கால அளவை குறைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் தன்னைப் போல் இருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் விரைந்து செலுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி சுகாதாரத்துறை உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. புதுச்சேரி நோய்த் தடுப்பு பிரிவில் இருந்து வெளியிட்டுள்ள அந்த ஆணையில் "வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 24 நாட்களுக்கு பிறகும் 84 நாட்களுக்குள்ளும் தடுப்பூசி செலுத்தலாம்" என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவரின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.