சிதிலமடைந்த பெருமாள் கோவில் - அறநிலைத்துறை கண்டுக்கொள்ளுமா?
By : Shiva
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே சிதிலம் அடைந்து இருக்கும் பெருமாள் கோவிலை புனரமைத்து தருமாறு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டி பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகுராய பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் திருவிழாக் காலங்களில் திரளானோர் பங்குபெற்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் பூஜை நடைபெறுவது வழக்கமாக இருந்துள்ளது. அதேபோல் புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று தேரோட்டமும் நடைபெறும். சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என்பதால் சிதிலமடைந்து காணப்படும் இந்த கோவிலை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இந்த கோவிலில் உள்ள கோபுரம், கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளிட்டவை மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே கோவிலை பழமை மாறாமல் புனரமைத்து தருமாறு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பழமை வாய்ந்த கோவில்களையும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இதுபோன்று கண்டுகொள்ளாமல் இருந்தால் வரும் காலங்களில் தமிழர்களின் பாரம்பரியமான கோவில்கள் அழியும் நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து அச்சம் தெரிவிக்கின்றனர்.
Source : Dinamani