காஷ்மீரில் பரபரப்பு : வைஷ்ணவ தேவி கோவிலில் தீ விபத்து.. விசாரணை தீவிரம்!
By : Yendhizhai Krishnan
காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கோவிலுக்குள் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரின் அருகாமையில் வைஷ்ணவ தேவி குகைக்கோவில் அமைந்துள்ளது. இந்த குகைக் கோவில் புனிதமான இந்து சமய கோவில்களில் ஒன்று. இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாக விளங்கி வருகின்றது. வட இந்தியாவில் போற்றப்படும் வழிபாட்டு தளங்களில் இந்த வைஷ்ணவி தேவி குகைக் கோவிலும் முக்கியமானது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5700 அடி உயரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வருடத்திற்கு சுமார் 8 லட்சம் பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து செல்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் குளிர்கால தலைநகரமான ஜம்முவில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தேசாய் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கத்ரா மலையடிவார முகாமில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு செங்குத்தான மலையின் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்.
இந்த கோவிலில் நவராத்திரியின் போது ஒன்பது நாள் திருவிழா நடைபெறும். அப்போது இந்த ஆலயத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வர். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த புனித ஸ்தலத்தில் நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தங்களின் தீவிர முயற்சியால் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக கோவில் தலைமை நிர்வாகி தெரிவித்தார். கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணம் என்ன என்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.