ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரம் - அறக்கட்டளை நிர்வாகி தகவல்!
By : Yendhizhai Krishnan
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தூண் உள்ளிட்ட கட்டமைப்பு எழுப்பும் பணிகள் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் கோயில் அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற ராம பக்தர்களின் நீண்ட நாள் கனவு தற்போது நினைவாகி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான பணியை 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கோவில் கட்டுமானத்தை மேற்கொள்வதற்காக ராமஜென்ம பூமி அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு அந்த அறக்கட்டளை சார்பாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது ராமர் கோவிலுக்கு அஸ்திவாரம் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. 400 அடி நீளம், 3 அடி அகலம், 50 அடி ஆழமுள்ள வகையில் தோண்டப்பட்டு அஸ்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அஸ்திவாரம் 10 அங்குல அளவில் 50 அடுக்குகளாக அடர்த்தியான கட்டட கலவை கொண்டு நிரப்பப்பட்டு வருவதாக ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகி அனில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்த அஸ்திவார பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு பெறும் என்றும் அதனைத் தொடர்ந்து தரைக்கு மேல் பகுதியில் அமையவிருக்கும் இளஞ்சிவப்பு நிற கற்களை கொண்டு உருவாக்கப்படும் பிரம்மாண்ட கோவில் தூண் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த தூணிற்க்கு பயன்படுத்தப்படும் இளம் சிவப்பு கற்கள் மிர்சாபூரிலிருந்து வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த கல்லை வடிவமைக்கும் பணிகள் அனைத்தும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ராமர் கோவில் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இரண்டு ஷிப்டுகளாக 24 மணி நேரமும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். ராமர் கோவில் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் டிசம்பர் மாதத்திற்குள் அஸ்திவாரம் பணிகள் நிறைவு பெறும் என்று அறக்கட்டளை தலைவர் தெரிவித்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.