இந்து அறநிலையத்துறை நிதியை பிற அமைப்புகளுக்கு பயன்படுத்தக் கூடாது - கர்நாடக அரசு!
By : Shiva
கர்நாடக இந்து அறநிலையத்துறையின் (HRCE) நிதியை இந்து அல்லாத பிற அமைப்புகளின் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் இந்து அறநிலையத் துறை நிதியை இந்து அல்லாத மத அமைப்புகளின் ஊழியர்களுக்கு விநியோகிப்பதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்து அறநிலையத்துறையின் அமைச்சர் சீனிவாஸ் பூஜாரி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் இந்து அறநிலையத்துறையின் நிதியை இந்து அல்லாத நிறுவனங்களுக்கு பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.
"எங்கள் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கோவில் நிதி மற்ற மத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த தகவலை நாங்கள் அறிந்தவுடன் அவ்வாறு கோவில் நிதியை மற்ற நிறுவனங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம்." எனவே அவ்வாறு வழங்கப்பட்ட நிதி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்து அல்லாத நிறுவனங்களுக்கான நிதி அந்தந்த மத நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சுமார் 27000 இந்து கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களுக்கு 133 கோடி செலவிடுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிதி இந்து அல்லாத 764 நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்பட இருந்தது. அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட நிதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோவில் பணியாளர்களுக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை இந்து அறநிலையத்துறை நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இது இந்து கோவில்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்ததற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Source : Swarajya