கல்லால் அடித்ததால் சுய நினைவை இழந்த கேரள காவலர் : முகக்கவசம் அணியாததால் வந்த சோதனை!
By : Yendhizhai Krishnan
மூணார் அருகே கண்டலூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று மரையூர் காவலர்கள் மீது முக கவசம் அணியாமல் சென்ற மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் காவலர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மூணாறு அருகே கண்டலூர் பகுதியில் ரோந்து பகுதியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அங்கு முக கவசம் அணியாமல் செல்பவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வந்தனர். அப்போது முகக் கவசம் அணியாமல் நடந்து வந்த சிலரை தடுத்து நிறுத்தினர். காவல் துறையினரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தப்பி ஓட முயற்சி செய்த அவர்களை காவல்துறையினர் துரத்திப் பிடிக்க முயன்றனர். அப்போது ஆஷிஷ் என்ற காவலரை கல்லால் தாக்கி அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
தலையில் பலத்த காயமடைந்த காவலர் சுய நினைவிழந்து கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த காவலரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். கல்லால் தாக்கப்பட்டதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சுய நினைவு திரும்பாததால் அவரை எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
6 நாட்களுக்குப் பிறகு அவருக்கு சுய நினைவு திரும்பியது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த காவலர் தனது நினைவாற்றல் அனைத்தையும் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்ட அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவர் சுயநினைவை கொண்டுவருவதற்காக போலீஸ் உயரதிகாரிகள் அவருக்கு வீடியோ கால் மூலம் பேச முயற்சி செய்தனர். ஆனால் அனைத்திற்கும் அவர் குழந்தைபோல் சிரித்துக்கொண்டு பதிலை மட்டும் அளித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் அவருக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவர் கடந்த காலத்தை மறந்து விட்டதால் அவரது குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆஷிஷைத் தாக்கிய நபர் சுலைமான் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முக கவசம் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை மீது கல்லெறிந்து அவர் சுயநினைவை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source : Communemag