பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த யோகி ஆதித்யநாத் - தேர்தல் வியூகமா?
By : Yendhizhai Krishnan
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தாண்டு உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லிக்கு நேற்று சென்ற அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை யோகி ஆதித்யநாத் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரியவருகிறது.
மேலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் எனவும் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தல் மற்றும் கொரோனா தொற்றை கையாண்ட விதம் குறித்து ஆலோசிக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Source: Dinamani