தடுப்பூசி வதந்திகளை போக்க நாடு முழுவதும் பிரச்சாரம் - மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்!
By : Shiva
கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை முறியடிப்பதற்காக நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்த ஆய்வுக் கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமை தாங்கினார். கூட்டம் முடிவடைந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை தொடர்பாக சவுதி அரசு எடுக்கும் முடிவுக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும் ஹஜ் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் இந்தியாவில் முடிவடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது முக்கியமாக இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிலர் தடுப்பூசி தொடர்பாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று பொதுமக்களிடம் வதந்திகளை பரப்புவர்களிடமிருந்து நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் தடுப்பூசி குறித்த வதந்திகளை போக்குவதற்காக நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். மாநில ஹஜ் கமிட்டிகள், வக்ப் வாரியங்கள், மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மற்றும் இதர சமூக மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல் இந்த பிரச்சாரத்தில் சுய உதவிக் குழுவை சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.