யோகாசனம் செய்து காட்டிய தி.மு.க அமைச்சர்!
By : Shiva
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் "சித்த மருத்துவ வார் ரூம்" என்கிற ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை துவங்கி வைத்து அங்கு யோகாசனம் செய்து காட்டினார். அவருக்கு அங்கு கூடியிருந்த திமுகவினர் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
சென்னை அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் யோகா, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா நோய்தொற்று காலம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சித்தமருத்துவ கோவிட் பிரிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று லேசாக இருப்பவர்களும், மிதமாக இருப்பவர்களுக்கும் இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் சித்த மருத்துவ முறையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக "சித்த மருத்துவ வார் ரூம்" அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவங்கி வைத்தார். அப்போது அங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு இடத்தில் யோகா செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த திமுகவினர் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தினர். ஆண்டு தோறும் ஜூன் 21-ஆம் தேதி யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
'பிட்னஸ் இந்தியா' என்ற பிரச்சாரத்தின் போது இந்தியாவில் உள்ள இளைஞர்கள் தங்களது உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்து காட்டியதை உடன்பிறப்புகள் இணையதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் தற்போது உடன்பிறப்புகளுக்கு தி.மு.க அமைச்சர் யோகா செய்து காட்டியதை ஆஹா,ஓஹோ என்று புகழ்ந்து வருவது அனைவரையும் நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.