Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் தொடங்கிய கீழடி அகழாய்வுப் பணி-பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை!

மீண்டும் தொடங்கிய கீழடி அகழாய்வுப் பணி-பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  12 Jun 2021 2:01 AM GMT

கொரோனா பரவல் காரணமாக கீழடியில் தடைப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அகழாய்வு பணி 2020 வரை தொடர்ந்து ஆறு கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வு பணியின் போது பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள், தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கட்டடங்கள், மணிகள், தங்கத்திலான பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் அந்தப் பகுதியில் இருந்த கண்டெடுக்கப்பட்டன.

இந்த 4 இடங்களிலும் ஏழாவது கட்டமாக நடைபெற இருந்த அகழாய்வு பணி கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், மழையின் காரணமாக குழியில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக பணியாளர்கள் ஈடுபட்டு இருந்ததாகவும், தற்போது அகழாய்வு பணியை மேற்கொள்வதற்கு அனைத்து பணிகளும் ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆறு கட்டங்களாக நடைபெற்று உள்ள கீழடி அகழ்வாராய்ச்சியின் போது பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க பொருள்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது ஏழாம் கட்ட ஆராய்ச்சியில் பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் அதிக அளவில் கிடைக்கும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News