பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் - இந்து மக்கள் கட்சி கோரிக்கை!
By : Shiva
தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பாக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணவர்கள் சேர்க்கை வருகின்ற திங்கள்கிழமை முதல் நடைபெறும் என்று தமிழக கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு சேர்க்கை நடைபெறும் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒரு இடத்தில் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்படும். இதனால் மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தகவல் தொடர்பாளர் ஹரிஹரன் சார்பாக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவர் தனது கோரிக்கை மனுவில் "கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வரும் நிலையில் மாணவர்கள் சேர்க்கையின் போது பத்து லட்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தனியார் மற்றும் அரசு பள்ளிகளை நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இதற்காக தனி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் முன்னாள் கல்வி அமைச்சர் அவர்கள் மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடைபெற வேண்டும் என்று தெரிவித்தபடியே இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார். பள்ளி மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சார்பாக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முதலமைச்சரின் முடிவுக்காக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.