கோவில்களில் நடக்கும் முறைகேடுகளை வெளிப்படுத்திய சமூக ஆர்வலர்கள் கைது - விடியலால் வந்த சோதனை!
By : Yendhizhai Krishnan
காஞ்சிபுரத்தில் காவல்துறையினரை அவதூறாக பேசியதாகவும், கோவில் ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் சமூக ஆர்வலர் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் சிலை செய்வதில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக இந்த இருவரும் புகார் அளித்திருந்த நிலையில் காவல்துறையினர் கைது செய்து உள்ளதால் இந்த கைது நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒலிமுகமதுபேட்டை ராயக்கோட்டை தெருவை சேர்ந்த தினேஷ்பாபு மற்றும் டில்லிபாபு ஆகியோர் கோவில் சிலை திருட்டு, கோவில்களில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். இவர்கள் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய சிலை செய்ததில் செய்யப்பட்ட முறைகேடு தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இவர்கள் அளித்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை செய்து இதில் சம்பந்தப்பட்டுள்ள அறநிலையத்துறை அதிகாரிகளை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் கடந்த மாதம் ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் இருந்த நகைகள் காணாமல் போனதாக இவர்கள் தெரிவித்த நிலையில், அவதூறு பரப்பினார்கள் என்றும் கோவில் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்றும் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தினேஷ் பாபு மற்றும் டெல்லி பாபு ஆகியோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது காவல்துறையினரை அவதூறாக பேசியதாகவும் ஏற்கனவே அவர் மீது கொடுக்கப்பட்டிருந்த புகார் தொடர்பாகவும் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கைது செய்யப்பட்ட தினேஷ்பாபு மற்றும் டெல்லி பாபு ஆகிய இருவரும் தொடர்ச்சியாக கோவில்களில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக புகார் கொடுத்து வந்த நிலையில் திடீரென்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பல சமூக ஆர்வலர்கள் பல்வேறு உள்நோக்கங்களுடன் கைது செய்யப்பட்டு வருவது தமிழகத்தில் தொடர்கதையாகி வரும் நிலையில் கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்து வந்த இரண்டு சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.