பல்லடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் - நடவடிக்கை பாயுமா?
By : Yendhizhai Krishnan
பல்லடம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில் நிலங்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதனை தொடர்ந்து கோவில் சொத்துக்களை மீட்கும் பணி இந்து அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் இருக்கும் பொங்காளியம்மன், மாகாளியம்மன், அங்காளம்மன், தண்டபாணி கோவில், அருளானந்த ஈஸ்வரர், வரதராஜ பெருமாள், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு புராதன சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால் கோவில் நிலங்கள் பெரும்பான்மையானவை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி உள்ளதால் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் கோவில் நிலங்களை சிலர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதால் அறநிலையத்துறை அதிகாரிகளின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகளின் உதவியோடு ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்படுகிறதா என்று விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பட்டியலிட்டு அவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ள கோவில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் பல்லடம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.