இலங்கையிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் இந்தியாவிற்குள் நுழைய முயற்சி - உஷார் நிலையில் கடலோர மாவட்டங்கள்!
By : Shiva
பயங்கர ஆயுதங்களுடன் இலங்கையில் இருந்து படகில் இந்தியாவிற்குள் சிலர் நுழைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் கடற்கரையை நோக்கி சிலர் ஆயுதங்களுடன் பயணம் செய்து கொண்டிருப்பதாக இலங்கையிலிருந்து மதுரை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு படையினர் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புலனாய்வுத் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்தவரின் அடையாளத்தை சரிபார்த்த பிறகு ஆயுதங்களுடன் இந்தியாவிற்குள் நுழைய இருப்பவர்கள் அமீர், பார்கத் மற்றும் நசீர் ஆகியோராக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இவர்கள் மூவரும் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் தாக்குதலை எங்கே தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
கடலோர மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த சாலைகளில் சோதனை சாவடிகளில் ஆயுதமேந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடலோர மாவட்டங்களில் இருக்கும் தங்கும் விடுதிகளில் சோதனைகள் முடுக்கி விடப்பட்டு, காவல்துறையினர் மற்றும் கடலோர காவல்துறையினர் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக காவல்துறையினர் விசாரணையின் போது இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருவதையொட்டி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது ஆயுதமேந்திய மூன்று பேர் இந்தியாவிற்குள் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல் துறையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.