பிரசித்தி பெற்ற பூரி தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்கள்!
By : Yendhizhai Krishnan
ஒரிசாவில் புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற இருப்பதால் அங்கு தேர்களை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
ஒரிசாவில் உலகப் புகழ்வாய்ந்த பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒன்பது நாள் நடைபெறும் இந்த தேரோட்ட திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பல பகுதியிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்த தேரோட்டத் திருவிழாவின் போது 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.
பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும். குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு பூரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடைவார்.
இந்த தேரோட்ட நிகழ்ச்சிக்கு முன்னதாக 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடைபெறும் இந்த தேரோட்ட திருவிழாவை இந்த வருடம் நடத்துவதாக கோவில் நிர்வாக கமிட்டி முடிவு எடுத்துள்ளது. எனவே இந்த மூன்று தேர்களையும் புதுப்பிக்கும் பணியை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.