டாஸ்மாக் கடை திறப்பு - கேலிக்குள்ளான ப.சிதம்பரத்தின் கருத்து!
By : Shiva
தி.மு.க அரசின் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு ஒரு பக்கம் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த போதும், தி.மு.க கூட்டணி கட்சிகள் கேலிக்குரிய காரணங்களைக் கூறி இந்த முடிவை ஆதரித்து வருகின்றனர். அந்த வகையில் கள்ளச்சாராயத்தை தடுக்கவே தமிழகத்தில் மதுக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் மதுக் கடைகள் திறந்தது பற்றி கருத்து தெரிவித்த அவர் "மதுக் கடைகள் வேண்டாம், மது விலக்கு வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால் கள்ளச்சாராயம் பெருகாது என்று நீங்கள் உத்தரவாதம் கொடுத்தால் நான் மதுக் கடைகளை திறக்கக் கூடாது என்று சொல்லத் தயார் என்று செய்தியாளர்களிடம் எதிர்த்து கேள்வி கேட்டார்.
ஆட்சியில் இருப்பவர்கள் தான் கள்ள சாராயத்தை தடுக்க வேண்டுமே தவிர பத்திரிக்கையாளர்கள் எப்படி தடுக்க முடியும் என்று பத்திரிக்கையாளர்கள் சிறிது குழப்பம் அடைந்தனர். மேலும் "தமிழகத்தில் கள்ளச்சாராயம் இருக்காது என்றால் கடையை மூடச் சொல்லலாம். மதுக்கடை திறப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அரசு என்ன செய்ய முடியும்?" என்று செய்தியாளர்களிடையே கேள்வி எழுப்பினார்.
மதுக்கடைகளை திறக்காமல் தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவது எப்படி என்று முன்னாள் நிதி அமைச்சரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் அவரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தற்போது டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு சமாளிப்பதற்காக பல்வேறு நகைப்பூட்டும் காரணங்களை தெரிவித்து வருவது தமிழக மக்களிடையே மீம்ஸ் மெட்டீரியலாக மாறி வருகின்றனர்.