கோவில்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளை மீண்டும் அறிவிப்பது ஏன்?- வானதி சீனிவாசன் கேள்வி!
By : Shiva
மத்திய அரசு திட்டங்களை தங்கள் திட்டம் என மக்களுக்கு கொண்டு சேர்க்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது மீண்டும் ஒரு நடைமுறையிலிருக்கும் திட்டத்தை கொண்டுவரப்போவதாக அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர். பெண்கள் அர்ச்சகர்களாக பணிபுரிய ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பாக பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது ஏன் என பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வைணவ மற்றும் சைவக் கோவில்களில் அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகர்கள் ஆக பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து ஜாதியினருக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் அர்ச்சகர்கள் பயிற்சியை வழங்கி வருகின்றன.
அதேபோல் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற மற்றொரு அறிவிப்பையும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்டிருந்தார். ஆனால் தமிழகம் முழுக்க உள்ள முக்கிய கோவில்களில் இன்றளவும் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்ற நடைமுறை இருப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளதும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டமாகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் உள்பட பல கோவில்களில் பெண்கள் சேவை புரிந்து வருகின்றனர். பெண்களுக்கு ஆன்மீகப் பயிற்சிகளை பேரூர் மற்றும் சிரவை ஆதீனங்கள் அளித்து வருகின்றன. இந்துக்கள் மரபில் பெண்களுக்கு ஆன்மீகத் தளம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னுதாரணமாக காரைக்கால் அம்மையாரும் அவ்வையாரும் திகழ்ந்துள்ளனர். எனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களை முதலில் அறிந்து கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். கோவில்கள் விஷயத்தில் திமுகவின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.