தனியார் தொண்டு நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலம் மீட்பு - அறநிலையத்துறை!
By : Shiva
குத்தகை காலம் முடிந்த பின்னர் தனியார் தொண்டு நிறுவனத்திடம் இருந்த 32 கிரவுண்ட் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமாக நிலத்தின் உரிமையை இந்த அறநிலையத்துறை எடுத்துக் கொண்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்ட் நிலத்தில் 44.5 கிரவுண்டு நிலத்தை கலவலக் கண்ணன் செட்டி தொண்டு நிறுவனம் 99 ஆண்டுகள் குத்ததைக்கு எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் குத்தகைக்கு எடுத்த இந்த கோவில் நிலத்தில் மேல்நிலைப் பள்ளி ஒன்றையும் அந்த தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது. இதில் 12.5 கிரவுண்ட் நிலத்தில் குத்தகை காலம் கடந்த 2010ஆம் ஆண்டு முடிந்த நிலையில் அந்த நிலத்தை கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அதை எதிர்த்து கலவலக் கண்ணன் செட்டி தொண்டு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் தீர்ப்பு கோவிலுக்கு ஆதரவாக வந்தது. அதன் அடிப்படையில் அந்த குத்தகை நிலத்தில் இருக்கும் பள்ளியை அந்த அமைப்பால் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து தற்போது கோவிலுக்கு சொந்தமான 32 கிரவுண்டு இடம் மற்றும் பள்ளிக் கட்டடங்களை தொண்டு நிறுவனத்தினர் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கோயில் செயல் அலுவலரிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான மீதி நிலத்தை பார்வையிட்டு அவற்றை முழுமையாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும் அனைத்து கோவில் நிலங்களையும் அரசு உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.