"அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டம்" - தமிழகத்துக்கு நான்கு மடங்கு நிதியை அதிகரித்த மத்திய மோடி அரசு!
By : Shiva
தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுவதற்கான திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு இந்த ஆண்டு ₹3,691.21 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
2024-ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு இந்த ஆண்டு 4 மடங்கு நிதி அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் நான்கு மடங்கு நிதி அதிகரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது:
தமிழ்நாட்டில் உள்ள 1.26 கோடி வீடுகளில், 40.36 லட்சம் (31.80%) குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15, 2019 அன்று, ஜல் ஜீவன் மிஷன் தொடங்கப்பட்டபோது, 21.65 லட்சம் (17.06%) வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. 22 மாதங்களில்,18.70 லட்சம் (14.74%) குடும்பங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழாய் மூலம் குடிநீர் பெறும் வசதி இல்லாமல் இன்னும் 86.53 லட்சம் வீடுகள் உள்ளன. 2024-ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்படுவதற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் வேகத்தை தமிழ்நாடு 179% அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான திட்டத்தை 2021- 2022-ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்தை மாநில அரசு இன்னும் செயல்படுத்தாமல் உள்ளது. எனவே இந்த திட்டத்தை விரைவாக முடிக்குமாறு தேசிய ஜல் ஜீவன் அமைச்சகம் தமிழ்நாட்டை கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஷெகாவத் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 2020 - 2021-ஆம் ஆண்டிற்கு தமிழ் நாட்டிற்கு மொத்தம் ₹924.99 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதில் ₹544.51 கோடி ரூபாயை மட்டுமே மாநில அரசு பயன்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : Financial Express