ஆந்திராவில் ஆங்கில மொழியைத் திணிக்கும் முதல்வர் ஜெகன் - பெற்றோர்கள் குற்றச்சாட்டு!
By : Shiva
ஆந்திராவில் இனி ஆங்கில வழியிலேயே பட்டப்படிப்புகள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த முடிவால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் கல்வி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் அமராவதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இன்டர்மீடியட் படிப்புக்கு பின்னர் பட்டப் படிப்புகள் அனைத்தும் ஆங்கில வழியில் மட்டுமே கற்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து அதற்கான உத்தரவும் நேற்று முன்தினமே வெளியிடப்பட்டது.
இந்த நடைமுறை நடப்பு கல்வி ஆண்டில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த திடீர் அறிவிப்பினால் 65,981 மாணவ மாணவியர் பாதிக்கப்படவுள்ளனர்.இந்த மாணவர்கள் அனைவரும் தங்களின் மேற்படிப்பை தெலுங்கு வாயிலாகவே கற்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். ஆந்திராவில் இருக்கும் மொத்தம் 1600 அரசு மற்றும் தனியார் பட்டப்படிப்பு கல்லூரிகளில் சேறுவதற்காக 2 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் 65,981 மாணவ மாணவியர் தெலுங்கு மொழியில் கல்வி கற்பதாக விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களின் தற்போதைய நிலை கேள்விக்குறியாகியுள்ளது. பட்டப்படிப்பில் ஆங்கில மொழி கட்டாயம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளதால் அம்மாநிலத்தில் இன்டர்மீடியட் படிப்புகள் முடித்துவிட்டு பட்டப்படிப்புக்காக காத்திருக்கும் மாணவ,மாணவியர் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.