செவிலிமேடு மாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு - நடவடிக்கை எடுக்க மறுக்கும் கோட்டாட்சியர்!
By : Yendhizhai Krishnan
காஞ்சிபுரத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்று வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பகுதியில், மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருவாய் கோட்டாட்சியரிடம் மனு ஒன்று ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி அளிக்கப்பட்டது. அதில் செவிலிமேடு மாரியம்மன் "கோவிலுக்கு சொந்தமான 2160 சதுரடி நிலத்தில் தனி நபர் ஒருவர் காங்கிரீட் தளம் போட்டு வீடு கட்டியுள்ளார். அவர் வீடு கட்ட அஸ்திவாரம் போடும் போதே கோவில் நிலத்தில் வீடு கட்டக் கூடாது என்று கிராம உதவியாளர் ஆக்கிரமிப்பாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆக்கிரமித்த இடத்தில்தான் ஆண்டுதோறும் காப்பு கட்டி திருவிழா நடத்தப்படும்" என்று கிராம மக்கள் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் புகார் மனுவை பெற்றுக்கொண்ட வருவாய்க் கோட்டாட்சியர் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். இதனால் கோவில் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.மேலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக கொடுக்கப்படும் எந்த மனு மீதும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவில் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோவில் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Source : Dinamalar