கோவில் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம், விசைத்தறி - வீடு கட்டி வாடகைக்கு விட்டதால் அதிர்ச்சி.!
By : Yendhizhai Krishnan
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்குமாறு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை ஆய்வு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக சுற்றுவட்டாரத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெடியரசம்பாளையம், தள்ளிபூலக்காட்டூர், வண்ணாம்பாறை உள்ளிட்ட கிராமங்களில் 22 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இவற்றை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு உள்ளதாகவும் விவசாயம் செய்து வருவதாகவும் கூறி நிலங்களை மீட்கக் கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை ஆய்வு செய்யுமாறு நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதனடிப்படையில் குமாரபாளையம் தாசில்தார், வருவாய்த்துறையினர் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதும் விசைத்தறி தொழில் நடைபெற்று வருவதும், இன்னும் சிலர் அங்கு வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு இருப்பதும் உறுதியானது.
ஆய்வின்போது ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் தொழில் செய்பவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது. இதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால், விரைவில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி நிலங்கள் மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.