கோவில் நிலங்களை ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு - பலனளிக்குமா?
By : Shiva
சென்னையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவற்றை உடனடியாக மீட்டு கோவில் நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தாசில்தார்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், கோவில் நிலங்களில் வாடகைக்கு இருப்பவர்கள் சரிவர வாடகை செலுத்தாமல் இருந்து வருகின்றனர். அதேபோல் கோவில் செயல் அலுவலர்கள் தங்கள் கடமையை சரியாக செய்யாமல் கோவிலுக்கு ஒதுக்கும் நிதியில் ஊழல் செய்து வருகின்றனர் என்று பல புகார்கள் எழுந்து வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
அந்த விசாரணையின் முடிவில் கோவில் நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் கோவில்கள் சம்மந்தமான அனைத்து ஆவணங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று சமீபத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள இணை ஆணையர்கள் தங்கள் மண்டலத்திற்கு உட்பட்ட கோவில்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின் போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலங்களை உடனடியாக கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலங்களை செயல் அலுவலர்கள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தாசில்தார்களுக்கு கலெக்டர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
கோவில் நிலங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து வரும் நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை பயனளிக்குமா என்றும் நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டு நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு கோவில் சொத்துக்கள் மீட்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.