முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயாலஜிகல்-இ கொரோனா தடுப்பூசி - விரைவில் மக்களுக்கு!
By : Shiva
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயாலஜிகல்-இ தடுப்பூசி 90 சதவீதம் செயல் திறன் கொண்டதாகவும் மத்திய அரசு இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்க உள்ளதாகவும் மத்திய அரசின் கொரோனா செயற்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிகல்-இ நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருப்பதாகவும் இந்த தடுப்பூசி கொரோனா நோய்க்கு எதிராக 90 சதவிகித செயல்திறன் கொண்டதாக இருப்பதாகவும் இந்த தடுப்பூசியின் விலை 250 ஆக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்தார். இந்த கொரோனா தடுப்பு மருந்து வரும் அக்டோபர் மாத வாக்கில் விற்பனைக்கு வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேபோல் ஜைடஸ்-கடிலா நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை புனேவைச் சேர்ந்த ஜென்னோவா பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆர்என்ஏ அடிப்படையிலான உள்நாட்டு தடுப்பூசியான இது தற்போது 2-வது கட்ட பரிசோதனையில் உள்ளதாகவும் செப்டம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். விலை குறைவான மற்றும் அதிக செயல்திறன் கொண்ட இந்த தடுப்பூசியை இந்தியா பெரிதும் நம்பியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷூல்டு தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் ரஷ்யாவின் தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் விரைவில் இந்தியாவில் செலுத்தப்படும் என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு தடுப்பூசி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படும் என்று மத்திய அரசின் கொரோனா செயற்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். இதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.