மண்டைக்காடு பகவதி கோவில் தேவப்பிரசன்னம் - கோவில் நகைகள், பட்டுப் புடவைகள் விற்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!
By : Yendhizhai Krishnan
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலுக்கு அருகே அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கேரள மாநிலம் வயநாடை சேர்ந்த சோதிடர் ஸ்ரீநாத் மற்றும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தேவ பிரசன்னம் பார்க்க தேர்வு செய்யப்பட்டு கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கும் பணியை தொடங்கினர்.
முன்னதாக பாறசாலை ராஜேஷ் போற்றி சிறப்பு கணபதி ஹோமம் நடத்தினார். அதன் பின்னர் நடந்த தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் அம்மன் கூறிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திருக்கோவிலில் அம்மனின் புற்று வளர்ந்து வருவதால் மூலஸ்தானத்தை பெரிதாக கட்ட வேண்டும் கோவில் முழுமையாக வாஸ்து பார்த்து புனரமைக்கப்பட வேண்டும் என்றும், திருக்கோவிலில் பூஜைகள் ஒழுங்காக நடக்கவில்லை, மந்திரங்கள் சொல்லி பூஜை செய்யபடவில்லை, அம்மனுக்கு படைக்கப்படும் நெய்வேத்தியம் சுத்தமில்லை,மடப்பள்ளி சுத்தமில்லை, மடப்பள்ளியில் உணவுபொருட்கள் செய்து அம்மனுக்கு படைக்காமலே வியாபாரம் செய்கிறார்கள், கோவிலை வியாபாரஸ்தலமாக மாற்றிவிட்டனர் என்பது போன்ற பல விஷயங்கள் தேவ பிரசன்னத்தில் வெளிப்பட்டன.
மேலும் கோவிலுக்கு வரும் பட்டு புடவைகள் அம்மனுக்கு சாத்தாமலே விற்கப்படுகின்றன என்றும் நன்கொடையாக வழங்கப்படும் தங்கம், பணத்தில் மோசடி நடக்கிறது என்றும் தெரிய வந்தது. தங்க தேர் கோயிலுக்கு கிடைத்தும் முறையாக பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என்பது குறித்து அதிருப்தி அடைந்த அம்மன் மாதம்தோறும் பௌர்ணமி நாளில் தங்கதேர் அறநிலையத்துறை சார்பாக கட்டணம் இன்றி இழுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் இருக்கும் இரு கிணறுகளை சுத்தப்படுத்தி கோவில் பயன்பாட்டிற்கு நீர் கோவிலுக்குள்ளே இருந்துதான் எடுக்க வேண்டும் அதேபோல் கோவில் குளத்தையும் சீரமைக்க வேண்டும் என்றும் அம்மன் உத்தரவிட்டுள்ளது.
இவை போக பின்வரும் உத்தரவுகளும் தேவ பிரசன்னத்தில் இருந்து கிடைத்துள்ளன. கோவிலுக்குள் சங்கு மற்றும் நாதஸ்வரம் ஊத வேண்டும். ஆயில்யம் நட்சத்திரத்தன்று நாகருக்கு சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும். மாசிக் கொடையின் போது திருவனந்தபுரம் அரண்மனை ராணிக்கு பட்டுடன் அழைப்பு விடுக்க வேண்டும். கொடையின்போது அம்மன் கதையை சொல்லும் வில்லுப்பாட்டு, புல்லுவன் பாட்டு பாட வேண்டும். இது முன்பு இருந்தது. இப்போது இல்லை. அதை மீண்டும் கொண்டு வர வேண்டும். கோயிலில் முன்பு இசக்கி, பூதத்தான், பைரவர் ஆகியோருக்கு தனி சன்னதி இருந்தது. இப்போது பைரவர் சன்னதி மட்டும் உள்ளது. இசக்கி, பூதத்தான் சன்னதிகள் மீண்டும் அமைக்க வேண்டும். அம்மனின் பெயரை சொல்லி பக்தர் சங்கத்தினர் பணம் வசூல் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும் இந்த கோவிலில் முதல் பரிகாரமாக உடனே மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த வேண்டும் என்று உத்தரவு கூறிய அம்மன், திருவனந்தபும் அரண்மனை ராணிக்கு பட்டு கொண்டு கொடுத்து பரிகார பூஜை செய்ய உத்தரவு பெற்று திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோயில், நாகர்கோவில் நாகராஜ கோயில், மண்டைக்காடு பால்குளம் ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயில் மற்றும் கோயில் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராம கோயில்களுக்கும் பிடி பணம் கொடுத்து பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
தெய்வப் பிரசன்னத்திலேயே மிகவும் ஆச்சரியமூட்டும் மற்றும் அதிர்ச்சிகரமான விஷயமாக கோவிலுக்குள் சிலை கிடைத்த சம்பவம் அமைந்தது. அம்மன் கோவில் வளாகத்தில் ஒரு இடத்தில் பூமிக்கடியில் சிலை இருப்பதாகக் கூறியதை அடுத்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்ட போது அப்படி ஒரு சிலை இல்லவே இல்லை என்றும், அங்கு தோண்ட முடியாது என்றும் கூறியுள்ளனர். வாக்குவாதத்துக்குப் பின்னர் தோண்டிப் பார்த்த போது சிலை கிடைத்ததால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.