கோவில் நிலம் விவரங்களை சேகரிக்க தொடங்கிய இந்து அறநிலையத்துறை - நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை!
By : Shiva
கோவில் நிலம் தொடர்பான விவரங்களை 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவில் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்பதற்கான முயற்சி தொடங்கியுள்ளது. 1985 - 1987 மற்றும் 2018 - 220 ஆண்டு அரசு கொள்கை விளக்க குறிப்பில் கூறியுள்ள நில விவரங்களை சர்வே எண்ணுடன் பதில் மனுவாக தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே இந்த ஆவணங்களை சேகரிக்கும் பணியில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோவில் இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை வருவாய்த் துறை பராமரித்து வரும் தமிழ்நிலம் மென்பொருளில் உள்ள ஆவணங்களோடு கணினி வழியாக ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு ஒப்பிடும்போது ஒருமித்து போகக்கூடிய ஆவணங்கள், பகுதிவாரியாக ஒருமித்துப் போகும் ஆவணங்கள், புதிதாக கண்டறியப்பட்ட நில ஆவணங்களை பிரித்து வகைப்படுத்த வேண்டும். இந்த பணியை அனைத்து இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் இணைந்து ஈடுபட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆய்வு செய்த விவரங்களை 15 நாட்களுக்குள் அறநிலையத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.