அரசு ஊழியர்கள் மத அமைப்பு நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
By : Shiva
அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசு ஊதியம் பெற்றுக் கொண்டு மத அமைப்பு நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு மத அமைப்புகளின் நிர்வாகத்திலும் சில ஆசிரியர்கள் நிர்வாகிகளாக இருப்பது தொடர்கதையாகி வரும் நிலையில் அதற்கு தற்போது உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் மத அமைப்புகளின் நிர்வாக தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சகாயராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கில் தூத்துக்குடி- நாசரேத் சிஎஸ்ஐ பேராய நிர்வாகக்குழு தேர்தல்களில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிட்டு மத அமைப்புகளின் நிர்வாகத்தில் இருக்கிறார்கள் என்றும், அவ்வாறு போட்டியிடுவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் மற்றும் எஸ்.ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் தோன்றிய வழக்கறிஞர் வாதிடுகையில், மதுரை-ராமநாதபுரம் சிஎஸ்ஐ பேராயர் தேர்தலில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போட்டியிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கோள் காட்டி பேசினார். எனவே தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ பேராலய தேர்தலிலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் போட்டியிடக்கூடாது என்று தீர்ப்பு அளிக்குமாறு வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்புகளின் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் தூத்துக்குடி-நாசரேத் சிஎஸ்ஐ பேராலய நிர்வாகக்குழு தேர்தல்களில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த மனு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் சிஎஸ்ஐ செயலர் பதில் அளிக்க வேண்டும் என்று வழக்கை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.