திருப்பதியில் மின்சார பேருந்துகள் மட்டும் இயக்க முடிவு - திருப்பதி தேவஸ்தானம்!
By : Shiva
திருப்பதியை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பதி-திருமலை இடையே மின்சார பேருந்துகளை மட்டுமே இயக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக திருப்பதி-திருமலை இடையே மின்சார பேருந்து போக்குவரத்து வசதி தொடங்கப்பட வேண்டும் என்று ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்திற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனடிப்படையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
அதில் திருப்பதி திருமலை இடையே இயக்க அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மின்சார பேருந்துகள் வாங்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார். போக்குவரத்திற்கு தேவையான 100 மின்சார பேருந்துகளை வாங்கவும் அவர் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே விரைவில் திருமலை- திருப்பதி இடையே மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் திருப்பதி-திருமலை இடையே மின்சாரத்தால் இயங்கும் வாடகை கார்கள் மட்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக குஜராத் மாநிலத்தில் இருக்கும் Statue of Unity சிலை அமைந்துள்ள பகுதியில் மின்சார பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து தற்போது திருப்பதி தேவஸ்தானம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின்சார வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.