இந்த வகையை சேர்ந்தவர்கள், பூஞ்சைத் தொற்றுக்கு பயப்படத் தேவையில்லை.!

By : Bharathi Latha
மியூகோர்மைகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்று பற்றிய பயம் பரவலாக உள்ளது. முதலில், நாம் புரிந்து கொள்ள வேண்டியது. மியூகோர் மைகோசிஸ் இல்லாத உலகத்தில் நம்மால் வாழவே முடியாது. சுற்றுப்புறத்தில் சாதாரணமாகவே மியூக்கோர் மைகோசிஸ் உள்ளது. வீட்டிற்குள் பதுங்கி இருந்தாலும், வீட்டுக்குள்ளும் பூஞ்சை இருக்கிறது. வெளிப்புறத்தில் இருக்கும் பூஞ்சை, மூக்கின் வழியே உடலினுள் செல்லும். ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், சில வினாடிகளில் இவற்றை தாக்கி அழித்து விடும். ஆனால், தீவிர வைரஸ் தொற்று இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இத்துடன் சேர்த்து, ரத்த சர்க்கரையின் அளவு மிக அதிகமாகும் போது, நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் குறைந்து விடும்.
ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருந்தால், பூஞ்சை தொற்று பற்றி பயப்பட அவசியம் இல்லை. மியூகோர் வளர்வதற்கு ஊட்டச்சத்து கொடுப்பதே ரத்த சர்க்கரை தான். கொரோனா வைரஸ் நுண்கிருமி என்பதால், ஒரே நேரத்தில் பல லட்சம் பேரை பாதிக்கிறது. ஆனால், அதோடு ஒப்பிடும் போது, பூஞ்சையின் அளவு மலை போன்றது. அவ்வளவு எளிதில் பரவாது. நாம் பயப்படும் அளவிற்கு மியூகோர் வீரியம் மிகுந்த பூஞ்சை இல்லை. மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். அதிலிருந்து இரண்டு விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மூக்கின் இரு புறத்திலும் உள்ள சைனஸ் பகுதியை பாதித்து, அங்கிருந்து கண்களுக்கு சென்று, இறுதியில் மூளையை பாதிக்கலாம் அல்லது சைனஸ் வழியே கீழே சென்று நுரையீரலை பாதிக்கும். முதலில் சிறு துகளாக உள்ளே செல்லும் பூஞ்சை, பிறகு காலனி போன்று கூட்டம் சேர்த்துக் கொண்டே போகும். கூட்டம் சேர சேர கண்ணுக்கும், சைனசிற்கும் இடையில் உள்ள எலும்பை சிறிது சிறிதாக அரித்து, கண்களுக்குள் செல்லும். இது, ஒன்றிரண்டு நாளில் நடந்து விடுவதில்லை, சில நாட்கள் ஆகலாம். கண்களுக்கு மேலே மூளையை சுற்றியிருக்கும் எலும்பை ஊடுருவி மூளையை பாதிக்கும். மூளையை பாதித்தால், முதலில் குழப்பம் வரும்; சிலருக்கு வலிப்பு வரலாம். இந்த நிலைக்கு சென்றால் தான் உயிரிழக்க நேரிடும்.
