தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால சிலைகள் - அதிகாரிகள் விசாரணை!
By : Yendhizhai Krishnan
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் இருந்து பழங்காலத்தைச் சேர்ந்த நந்தி சிலையும், பெண் சிலையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீவைகுண்டம் அருகே முத்தாலங்குறிச்சி சேர்ந்த வள்ளிநாதன் என்பவர் அங்குள்ள சாஸ்தா கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இந்த சிலைகள் தென்பட்டுள்ளன.
சிலை இருப்பதை பார்த்த வள்ளிநாதன் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க, அவருடன் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் சிலைகளை ஆய்வு செய்ய சென்றுள்ளனர். இதையடுத்து ஆற்றில் கிடந்த 60 கிலோ எடை கொண்ட பெண் சிலை உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு டன் எடை கொண்ட நந்தி சிலை ஒன்றும் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இரண்டு சிலைகளும் தற்போது ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் இந்த சிலைகள் இரண்டும் திருநெல்வேலி அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிலைகள் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகே கோவில் கட்டிடம் இருந்ததற்கான அடையாளம் தெரிவதாகவும், செங்கல் கட்டுமானம் மற்றும் கல்தூண்கள் தென்படுவதாகவும், முறையாக ஆய்வு செய்தால் சிலைகள் குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆற்றில் கிடைத்த பெண் சிலை கரங்களை குவித்த நிலையில், கால்களை மடக்கி சுவாமி தரிசனம் செய்வதை போல் அமைந்துள்ளதால் முற்காலத்திய ராணியின் சிலையாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
அதற்கேற்றார்போல் நிலையான வடிக்கப்பட்ட பெண்ணுருவம் நிறைய அணிகலன்கள் அணிந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காலம் 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கிராம மக்களோ முத்தாலங்குறிச்சியில் 16ஆம் நூற்றாண்டில் சிவன் கோவில் ஒன்று அழிந்து போனதாகவும் அதன் சுவடுகள் தான் இப்போது ஒவ்வொன்றாக வெளிப்பட ஆரம்பித்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.