காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? - பிரதமர் மோடி ஆலோசனை!
By : Shiva
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்து வரும் நிலையில் காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் 24ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான உத்தரவாதத்தை பிரதமர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்ட பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை இரண்டாக பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் பல தரப்பு மக்களிடம் இருந்து வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்தது.
சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். அங்கு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்பு அறிவித்தபடி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வரும் 24ம் தேதி, ஜம்மு- காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை அடைத்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு மற்றும் காஷ்மீர் பள்ளாத்தாக்கு தலைவர்களுக்கு இடையேயான நேரடி பேச்சுவார்த்தையின் தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் தலைவர்களுடனான இந்த சந்திப்பின்போது ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்தும் அங்கு தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாகவும் மோடி உத்தரவாதம் அளிப்பார் என கூறப்படுகிறது. மேலும் எல்லை தொடர்பான வரையறை முடிந்தபின்னர் தேர்தல் பணிகள் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லை மறுவரையறைக்கு பின்னரும் காஷ்மீரின் நிலப்பரப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Source : news 18