புதுக்கோட்டை அருகே கோவிலில் சுவாமி சிலைகள் தலை வெட்டப்பட்டதால் பரபரப்பு!
By : Yendhizhai Krishnan
தமிழகத்திலும் தற்போது கோவில் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் புதுக்கோட்டை அருகே பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே கீழநாஞ்சூர் கிராமத்தில், பழமையான காசி விசுவநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் யார் பணிபுரிவது என்பதில் இரண்டு அர்ச்சகர்களுக்கு இடையே பிரச்சினை நிலவுவதாக கூறப்படுகிறது. எனவே கோவில் சரிவர பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று திறந்து கிடந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் இருந்த கைலாசநாதர் சிவலிங்கத்தையும் நந்தி சிலையின் தலையை உடைத்துள்ளனர்.
அதேபோல் கிருஷ்ணர், விநாயகர், அம்பிகை உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நேற்று முந்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் சிலைகளை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.