கோவில் நிலத்தை அளக்கும் பணி மும்முரம் - நீதிமன்ற உத்தரவை அறநிலையத்துறை நிறைவேற்றுமா?
By : Shiva
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் நிலங்களை கணக்கெடுக்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி உள்ளதால் கோவில் நிலங்கள் மீட்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோவில்களுக்கு சொந்தமாக 4.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் தற்போது அவற்றை மீட்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை விரைவில் மீட்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய் துறையினருடன் இணைந்து கோவில் நிலங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கணக்கெடுக்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.
இதேபோல் சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள ஈஸ்வரர் கோவில் நிலங்களிலும் சமீபத்தில் அளக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் நிலங்களும் அளக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து கோவில் நிலங்கள் மீட்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் நிலங்களை அரசு திட்டங்கள் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு சுவீகரிப்பது குறித்து அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் அனுப்பிய சுற்றறிக்கை வெளியானது. சென்னை உயர் நீதிமன்றம் கோவில் நிலங்களை மத ரீதியான செயல்பாடுகளை தவிர வேற எந்த பயன்பாட்டுக்கும் உபயோகிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்து உள்ள நிலையில் இந்த சுற்றறிக்கை கோவில் நிலங்களில் கைவைப்பது திமுக அரசும் தொடரும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.