பாகிஸ்தானில் தினமும் கட்டாய மதமாற்றம் - ஐ.நா சபையில் இந்தியா குற்றச்சாட்டு!
By : Shiva
பாகிஸ்தானில் தினமும் கட்டாய மதமாற்றம் நடைபெற்று வருவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக இந்திய தூதரக குழுவின் செயலர் பவன்பதே உரையாற்றினார். அப்போது "பாகிஸ்தானில் தினமும் மதமாற்றம் நடைபெற்று வருகிறது. இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின சிறுமிகளை கடத்தி பாலியல் கொடுமை செய்து அவர்களை கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து வருகின்றனர்.இந்த கொடுமைகள் அனைத்தும் பாகிஸ்தான் அரசின் துணையோடு நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.
கடந்த ஓராண்டில் மட்டும் பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையின சிறுமிகள் கடத்தப்பட்டு அவர்களை மதமாற்றம் செய்து திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்றும் அதேபோல் சிறுபான்மையின கோவில்கள் சூறையாடப்பட்டு வருகின்றன என்றும் பேசினார். மேலும் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு தரப்பட்டு அவர்கள் செயல்பட அரசே அனுமதி அளிக்கின்றது என்றும் குற்றம் சாட்டினார்.
இதனால் சிறுபான்மையின மக்களின் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவை அனைத்திற்கும் பாகிஸ்தான் அரசு துணை போகிறது என்று அவர் ஐ.நா சபை கூட்டத்தில் தெரிவித்தார். இவ்வாறான சிறுபான்மையினர் மீதான கொடுமைகள் மற்றும் பயங்கரவாதிகளால் ஏற்படும் பாதிப்புக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்கப்படுவதும் சிறுபான்மை இனத்தவர்களின் கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்படுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில் தற்போது ஐநா சபை கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதி பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான புகார்கள் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.