பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியம் -அமைச்சரவை ஒப்புதல்!
By : Shiva
கொரோனா நோய்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் மே மற்றும் ஜூன் மாதங்களில் ரேஷன் கடைகளில் 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. பின்னர் இந்த திட்டத்தை தீபாவளி பண்டிகை வரை நீட்டிப்பு செய்வதாக பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் ஏழைகளுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ், இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ஜூலை முதல் நவம்பர் வரையிலான ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த திட்டத்தின் மூலம் 81 கோடியே, 35 லட்சம் பேர் பலனடைவர் என்றும் இதற்கு ஆகும் மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசுக்கு, 67,266 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.