பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் பாகிஸ்தான் - இந்தியா கண்டனம்!
By : Yendhizhai Krishnan
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கி அவர்களை ஊக்குவிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில் பயங்கரவாதிகளால் உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு பாகிஸ்தானே பொறுப்பேற்க வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா புகார் தெரிவித்துள்ளது.
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையின் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் பிரதிநிதி கலீல் ஹஷ்மி காஷ்மீரில் பிரச்சனைகள் இருப்பதாக பேச முற்பட்டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த இந்திய பிரதிநிதி பவன்குமார் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதில் பாகிஸ்தானில் மத மாற்றம் என்பது தினமும் நடைபெறும் நிகழ்வாக உள்ளது. சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவ பெண்களை கடத்தி சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து மதமாற்றம் செய்து வருகின்றனர். பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பாகிஸ்தான் அரசு ஊக்குவித்து அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
இதே போல் ஐநாவால் சர்வதேச பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கி வருகிறது. இந்த பயங்கரவாதிகளால் உலக நாடுகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு பாகிஸ்தானே பொறுப்பேற்க வேண்டும். பயங்கரவாதத்தால் மக்களுக்கு ஏற்படும் துன்பம் ஒரு மனித உரிமை மீறல் செயலாகும். அதனை ஆணையத்தின் பார்வையில் இருந்து திசை திருப்புவதற்காக காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் அரசு எழுப்புகிறது என்று அவர் அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் அளித்து அவர்களை ஊக்குவித்து வருவதால் அவர்களால் ஏற்படும் துன்பத்திற்கு பாகிஸ்தான் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியா ஐநா சபையில் கோரிக்கை விடுத்தது தொடர்ந்து காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்க முயலும் பாகிஸ்தான் பிரதிநிதியை வாயடைத்து உட்காரச் செய்து விட்டது.