கிடப்பில் போடப்பட்ட பராமரிப்பு பணி - கோவிலுக்குள் செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி!
By : Yendhizhai Krishnan
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் அதுக்கு சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இந்த கோவில் இருக்கும் பகுதிக்கு அருகே ஆறு மாதங்களுக்கு முன்பாக கல் பதிக்க 1 அடிக்கும் மேல் வரை பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டு அங்கு ஜல்லி கற்கள் போடப்பட்டு பின்னர் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. சாலை பணியின்போது தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த மணலை வேறு பணிகளுக்கு பயன்படுத்திவிட்டதால் தற்போது அந்த சாலையை மூடுவதற்கு மண்ணில்லாமல் சாலை அமைக்கும் பணி தடைபட்டுள்ளது.
தடைப்பட்டுள்ள சாலை பணியால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்கு முன் இருக்கும் பள்ளத்தால் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்படும் என்றும் 15 நாட்களுக்குள் சாலையை பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் பெட்ரீக் அருண்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருவதற்கு வசதியாக சாலைகளை சீரமைத்து தருமாறு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.